20191007

இவ்வளவிற்கு நடுவிலும், ரிசர்வ் பேங்க் சத்தம் இல்லாமல் ஒரு படி எடுத்து வைத்துள்ளது

சென்ற வருடம் (2018-19) இந்தியன் ரிசர்வ் பேங்க் பல சோதனைகளை சந்தித்தது. சுயாட்சி பலவீனம், திடீர் என்று ஊர்ஜித் படேல் விலகியது, வங்கி அல்லாத நிதி நிறுவங்களின்  பணப் பட்டுவாடா தடுமாற்றம், வங்கிகளின் வாரா கடன் சுமை... ஆகியன. 
ஆனால் இவ்வளவிற்கு நடுவிலும், ரிசர்வ் பேங்க் சத்தம் இல்லாமல் ஒரு படி எடுத்து வைத்துள்ளது. தனது தங்கம் கையிருப்பை 53 டன் அதிகம் ஆக்கி உள்ளது, டாலரை விற்று. 
டாலரை ஏன் விற்பானேன், தங்கம் வாங்குவானேன் ? அதுவும் கடந்த பத்து வருடத்திலேயே அதிக அளவு ? இதற்கு முன் 2009இல் 200 டன் வாங்கியது. 
2009 இல் உலகளாவிய தொழில் முடக்கம் (recession) வந்தபோது ஒரே ஒரு வகையான ரிசர்வ் இருந்தால் பிரச்சனை ஆகி விடலாம் என்ற யோசனையில் அப்போது 200 டன் தங்கம்  வாங்கியது. இந்தியா மட்டும் அல்ல வேறு நாடுகளும் அவ்வாறு தான் செய்தன, டாலரை மட்டும் நம்ப கூடாது என்பதால். 
ஆனால் இப்போது வாங்க என்ன வந்தது அவசியம் ? அதுவும் டாலர் மதிப்பு இன்னும் ஏறும் என்ற எதிர்பார்ப்பில் ? 
நீயா நானா என்ற பாணியில் அமெரிக்காவும் சீனாவும் இன்று ஏற்றுமதி இறக்குமதி வணிகம் தொடர்பாக போட்டி போட்டுக்கொண்டு வரி விகிதத்தை (Tariff % of Tax) உயர்த்தி வருகின்றன. டாலர் பெரியதா இல்லை யுவான் பெரியதா என்ற கவுரவமும் இதில் அடங்கி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வணிகம் படுத்ததால், இவற்றை நம்பி உள்ள மற்ற நாடுகளின் உற்பத்தி, ஏற்றுமதியும் குறைந்துள்ளன. இதனால் மற்ற நாடுகள் கொஞ்சம் பயந்து போய் உள்ளன. இரண்டு பெரிய சக்கரங்கள் மோதும் போது, நடுவே சில கற்களும் உடைந்து போகுமே  !  
ஆகவே, இறக்குமதியை குறைக்க தங்கள் கரன்சியை மதிப்பு இழக்க செய்வார்கள். அது ஏற்றுமதி செய்பவர்களுக்கு உதவி செய்யும். ரிசர்வ் பேங்க் அவர்கள் மூலம் அதிக டாலர்களை வாங்கி வைக்க முடியும். மேலும் வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கும். அப்போது மக்களுக்கு எங்கே பணத்தை போட்டால் அதிக வட்டி கிடைக்கும் என்று அலைவார்கள். 

இந்த மாதிரி குழப்பமான சமயங்களில் பத்திரமான வருமானம் தங்க முதலீடு தான். அல்லது இன்னும் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும்.  இந்தியா மட்டும் அல்ல வேறு நாடுகளும் இப்போது தங்கம் அதிகமாக வாங்குகிறது. சீனாவும் ரஷியாவும்  ஏற்கனவே தங்க இருப்பை உயர்த்தி உள்ளன, நம்மை விட அவர்கள் அதிகம் பாதிக்க படலாம் என்ற நோக்கில்.  
சரி நாம் என்ன செய்யலாம் ? விலை குறையும்போது எல்லாம், ரிசர்வ் பேங்க் செய்ததையே செய்யலாம். ஏனென்றால், தங்கம், பங்கு வணிகம், ரியல் எஸ்டேட், கரன்சி, ஆகியன வெவ்வேறு சமயங்களில் தான் உச்சத்தில் இருக்கும். இப்போது மீதி எல்லாம் வலிமை இல்லாமல் காணப் படுவதால், தங்கம் மட்டும் தான் எழுந்து நிற்கும். அடுத்த சுழற்சியில், மற்றவை எழுந்து நிற்கும்போது தங்கத்தில் இருந்து வெளியே வந்து விட வேண்டும். 

No comments:

Post a Comment

Pl send your response to saran@excisegst.com